ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) விசாரணையைத் தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை (அக். 1):
ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் புகாரில் முன்னாள் காவல் ஆணையரின் தலையீடு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் துறையினர் சரியாக அடையாளம் காணவில்லை என்றும், விசாரணைக்குக் கால தாமதம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வழக்கைக் கலைத்து இழுத்து மூடுவதற்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கைமாறியதாகக் கூறி, வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகளின் பங்கு குறித்து சுதந்திரமான அமைப்பின் மூலம் தீவிர விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற விசாரணை: இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கைச் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய நீதிபதி:
"குழந்தைகள் தொடர்பான வழக்குகளைப் பயன்படுத்தி விளம்பரம் தேடக் கூடாது."
"சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு 4 நாட்கள்தான் ஆகிறது, அதற்குள் என்ன முடிவு செய்ய முடியும்?"
"தமிழக காவல் துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? சிபிஐ விசாரணைக்கு மட்டும் அதிகாரிகள் ஆப்பிரிக்காவிலிருந்தா வரப்போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் உத்தரவு: காவல் துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், வழக்கின் ஆதாரங்கள் வைத்துள்ளவர்கள் SIT விசாரணை அதிகாரியிடம் வழங்கலாம் என்றும், சிறப்பு புலனாய்வுக் குழுவின் செய்தி அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் வாராகி தன்னிடம் உள்ள ஆதாரங்களைச் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் வழங்கிட நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வீரமணி மீதான வழக்கின் நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 7-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
Related Stories
Comments
Sign in to join the conversation.
Loading comments…



