ஆர்டிஐயில் இருந்து சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்களித்த அரசாணை ரத்து: தமிழக அரசு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ், பொதுச் சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டிருந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஆர்டிஐயில் இருந்து சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்களித்த அரசாணை ரத்து: தமிழக அரசு
சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட எக்ஸ் (X) தளப் பதிவில், "தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 24 உட்பிரிவு (4)-ன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனிதவள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையும் எழுந்த எதிர்ப்புகளும்
முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல முக்கிய விவரங்கள் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு அரசு விலக்கு அளித்திருந்தது.
எனவே, உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பான பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு)த் துறை குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இனி பதில் அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த அரசாணைக்கு பாமக, அமமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தவெக-வுக்கு ஆதரவளிக்கும் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
அரசியல் கட்சிகளின் விமர்சனம்
இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தர வேண்டியதில்லை என அரசாணை வெளியிட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டிருந்தார்.
காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மக்கள் கவனத்திற்கு வருவதைத் தடுக்கும் என்றும், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட உரிமைகளை ஒடுக்குவதாகவும் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தமிழக அரசின் பொது சட்டம் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து வெளியிட்ட அரசாணை தற்போது அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
Related Stories
Comments
Sign in to join the conversation.
Loading comments…





