மேற்கு வங்க மாநிலத்தில் தவெக முதல் கட்சி அலுவலகம் திறப்பு: மாநிலக் கிளையைத் தொடங்கி வைத்தார் புஸ்ஸி ஆனந்த்
தமிழகத்தின் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது முதல் வெளிமாநில அலுவலகத்தை மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் திறந்து வைத்து தனது கட்சி அமைப்பை விரிவுபடுத்தியுள்ளது.

புதுடில்லி / கொல்கத்தா: தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சி, தனது அரசியல் பார்வையை இந்திய அளவிலான பல்வேறு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் தனது முதல் கிளை அலுவலகத்தை அமைத்து, அதிகாரப்பூர்வமாகக் கட்சிப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
பகுபூரில் திறக்கப்பட்ட முதல் அலுவலகம்: மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுபூர் பகுதியில் தவெகவின் புதிய மாநிலக் கட்சி அலுவலகத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் தவெகவின் மேற்கு வங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலிராய், இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மேடையில் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யின் பல்வேறு பிரம்மாண்ட உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழக அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தின் உருவப்படமும் மேடையை அலங்கரித்தது.
துடிப்புமிக்க இளைஞர்கள் பங்கேற்பு: சுமார் 40-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளின் தோள்களிலும் தவெக கட்சியின் அடையாளமான இருவண்ணத் துண்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினராகவும், எஞ்சியோர் நடுத்தர வயதைக் சேர்ந்தவர்களாகவும் இருந்தது கட்சியின் புதிய எழுச்சியைக் காட்டுவதாக அமைந்தது.
கட்சியை விரிவுபடுத்த விரிவான திட்டம்: மேற்கு வங்க மாநிலத்தில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்துள்ள தவெக, அடுத்தகட்டமாக அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளைத் தொடங்கி, அமைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து வடகிழக்கு மற்றும் அண்டை மாநிலங்களிலும் கட்சியை விரிவுபடுத்த உள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்க அரசியல் சூழல்: மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக), சுவேந்து அதிகாரியை முதலமைச்சராகக் கொண்டு அம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. இத்தகைய அரசியல் சூழலில், தமிழகத்தைச் சேர்ந்த தவெக அம்மாநிலத்தில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Related Stories
Comments
Sign in to join the conversation.
Loading comments…





